Thursday, June 14, 2012

வாழ்கை ஒரு வட்டம்

ஒரு ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை நிலை பற்றி அதிருப்தியும், கவலையும் அடைந்திருந்தான். ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான். வெளியில் இருந்து பார்த்தான், செல்வந்தனின் செல்வச் செழிப்பும், அவன் வீட்டிற்கு வரும் பெரிய மனிதர்களைப் பார்க்கும் போது பேராசையும் பொறாமையும் அடைந்தான். கடவுளிடம் தன்னை செல்வந்தனாக மாற்றிவிடுமாறு வேண்டினான். கடவுளும் இசைந்து அவனை செல்வந்தனாக மாற்றினார்.
செல்வ வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த அவன் வீட்டிற்கு, வருமான வரித் துறை அதிகாரி தன் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினான். அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்கும் ஊழியர்கள், அவனுக்கு இருக்கும் மரியாதை ஆகியவை செல்வந்தனாக இருந்த தொழிலாளியைக் கவர்ந்து விட்டன. உடனடியாக வருமான வரித் துறை அதிகாரியாக ஆசைப்பட்டான். கடவுளும் அவனை வருமான வரித் துறை அதிகாரியாக மாற்றினார்.
வருமான வரித் துறை அதிகாரியான அந்த கல் உடைக்கும் தொழிலாளி எல்லோர் வீட்டிற்கும் சோதனைக்குச் சென்றான். அனைவரின் வெறுப்புக்கும் ஆளானான். கோடை காலம் வந்தது. வெந்து தணிந்தது அவன் உடம்பு. சூரியனைப் பார்த்தான். யாருக்கும் பயப்படாத, எல்லோரையும் சுட்டெரிக்கும் சூரியன் போல் மாறிடத் துடித்தான்.
கடவுளும் அவனை சூரியனாக மாற்றினான். தன் கதிர்களால் பிரகாசமான வெளிச்சத்தையும், சூட்டையும் வாரித் தெளித்த சூரியனை விவசாயிகள் திட்டினர். பெரும் மேகம் ஒன்று வந்தது. சூரியனின் வெளிச்சத்தை அது மறைத்தது. இருட்டாக்கியது. மழை மேகமாய் மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.
மழை மேகமாய் மாறி, மழையாய்ப் பொழிந்து, வெள்ளமாய் பெருக்கெடுத்து விவசாயிகளின் வயிற்றெரிச்சலைப் பெற்றான். மேகமாக மாறிய அவனை ஏதோ சக்தி மிகுந்த ஒன்று இழுத்துச் செல்வதைப் பார்த்தான். காற்று என அறிந்ததும், காற்றாகி விடுமாறு கடவுளை வேண்டினான்.
காற்றாக மாறி, சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வந்தான். கூரை வீடுகளையும், மரங்களையும் சாய்த்தான். ஆனால் தன்னால் பெரும் பாறை ஒன்றினுள் புக முடியாததை எண்ணி தன்னை பாறையாக மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.
பாறையாக மாறிய அவன் தன்னைப் போல் சக்தி மிகுந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெருமிதம் அடைந்தான். உடனே தன்னை சுத்தி மற்றும் உளியால் பிளக்க வந்த தொழிலாளியைப் பார்த்த்தும், கடவுளிடம் தன்னைப் பழையபடி கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிடும் படி மன்னிப்புடன் வேண்டினான். கடவுளும் வாழ்க்கையை உணர்ந்த அவனை கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிட்டார்.
கருத்து: வாழ்க்கை என்பது முடிவும் தொடக்கமும் ஒன்றாகவே அமைந்த ஒரு வட்டம். - ஜென் கதைகள்  - Source  Boldsky Limitless Living