Monday, March 21, 2011

இதற்கு முன்னால்…


ஜென் மாஸ்டர் ஒருவர். புதிய ஆசிரமம் ஒன்றைத் திறந்துவைப்பதற்காக ரயிலில் புறப்பட்டு வந்திருந்தார். அவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக விழாக் கமிட்டித் தலைவரே நேரில் வந்திருந்தார்.
மாஸ்டர் காரில் ஏறி உட்கார்ந்தார். ஏஸியை ஆன் செய்துவிட்டு வண்டியை ஓட்டத் தொடங்கினார் டிரைவர்.
இப்போது விழாக் கமிட்டித் தலைவர் பேச ஆரம்பித்தார். ‘நீங்க இங்கே வந்ததும், இந்த ஆசிரமத் தொடக்க விழாவில கலந்துக்கறதும் எங்களுக்கு ரொம்பப் பெரிய பெருமை!’
மாஸ்டர் அதற்குப் பதில் சொல்வதற்குள் சாலையில் ஒரு பைக் குறுக்கே வந்தது. சடன் ப்ரேக் அடித்துக் காரை நிறுத்தினார் டிரைவர்.
உடனே, விழாக் கமிட்டித் தலைவர் முகத்தில் எரிச்சல். ‘இவனுங்கல்லாம் ரோட்ல வண்டி ஓட்டலை-ன்னு யார் அழுதாங்க?’ என்று கோபத்தோடு கத்தினார்.
ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘இது உங்களோட சொந்தக் காரா?’ என்றார்.
‘ஆமா சாமி, ஏன் கேட்கறீங்க?’
‘இதுக்கு முன்னாடி நீங்க என்ன வண்டி வெச்சிருந்தீங்க?’
அவர் கொஞ்சம் யோசித்து ஓர் இருசக்கர வாகனத்தின் பெயரைச் சொன்னார். அதைக் கேட்ட ஜென் மாஸ்டர் மீண்டும் சிரித்தார். ‘மனுஷனோட மனசு ரொம்ப விசித்திரமானதுதான். இல்லையா?’
‘என்ன சாமி சொல்றீங்க? ஒண்ணும் புரியலையே!’
மாஸ்டர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். ‘எங்க ஊர்ல ஒரு கறுப்பன், அவனுக்குச் செவப்பாகணும்ன்னு ஆசை. ஏதோ ஒரு க்ரீமைப் பூசிகிட்டானாம். செக்கச்செவேல்ன்னு வெளுத்துட்டானாம்!’
’அவன் நேரா தன் மனைவிகிட்ட ஓடினான். அடியே, நீயும் இந்த க்ரீமைப் பூசிக்கோ, என்னைமாதிரி சிவப்பா மாறிடலாம்-ன்னு சொன்னானாம். ஆனா அவ அதுக்கு ஒப்புக்கலை. நான் கறுப்பாவே இருந்துடறேன், அதுதான் எனக்கு விருப்பம்-ன்னு சொன்னாளாம்!’
‘அதுக்கு அந்த ஆள் சொன்னானாம். ‘ச்சே, இந்தக் கறுப்பனுங்களே இப்படிதான், எங்களைமாதிரி செவப்பானவங்க சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கும்ன்னு யோசிக்கமாட்டாங்க, இவங்களுக்குப் புத்தியே கிடையாது’ன்னு!’
கதையைச் சொல்லி முடித்த மாஸ்டர் விழாக் கமிட்டித் தலைவரைப் புன்னகையோடு பார்த்தார். ‘அதான் சொன்னேன், மனுஷ மனம் ரொம்ப விசித்திரமானது, ஒரு நிலையிலேர்ந்து இன்னொரு நிலைக்கு ஏறினதுமே, முந்தின நிலை மோசமானதுன்னு நினைக்க ஆரம்பிச்சுடுது, அதுல இருக்கறவங்களையெல்லாம் இழிவாப் பார்க்கத் தொடங்கிடுது, அரை நிமிஷம் முன்னாடி நாமும் அங்கதான் இருந்தோம்-ன்னு நினைக்கறதில்லை!’  -  ஜென்வழி

No comments:

Post a Comment